search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக ஒன்றிய செயலாளர் கைது"

    யானை தந்தங்களை கடத்த உதவியதாக தி.மு.க. ஒன்றிய செயலாளரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீசார் நேற்று பெங்களூருவில் ரோந்து சென்றனர். அப்போது 12 யானை தந்தங்களை விற்க முயன்ற பெங்களூருவைச்சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை மற்றும் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த வாலிபர்கள் 2 பேரை கைது செய்தனர்.

    அப்போது அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மகாலட்சுமி லே-அவுட் போலீசார் அஞ்செட்டிக்கு வந்தனர். அங்கு அஞ்செட்டி ஒன்றிய தி.மு.க. ஒன்றிய செயலாளர் காதர்பாஷா (வயது 50), அவரது கார் டிரைவர் முத்துசாமி (38) ஆகியோரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர்.

    அப்போது அவர்களை சிலர் கடத்த முயல்வதாக ஒன்றிய செயலாளரின் ஆதரவாளர்கள் கிராம மக்களுக்கும், தி.மு.க.வினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து 2 பேரையும் கைது செய்து அழைத்து செல்ல விடாமல் தடுத்தனர். பெங்களூரு போலீசாரையும் தாக்க முயற்சி செய்தனர்.

    இதுகுறித்து தேன்கனிக் கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பெங்களூரு போலீசார் 5 பேரையும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மற்றும் டிரைவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு கூடிஇருந்த மக்களிடம் சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக பெங்களூரு போலீசார் தான் அவர்களை கைது செய்ய வந்ததாக கூறி கிராம மக்களையும், தி.மு.க. வினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.

    போலீஸ் நிலையத்தில் வைத்து 2 பேரிடம் விசாரணை நடத்தியபிறகு அவர்களை பெங்களூரு போலீசாரிடம் தேன்கனிக்கோட்டை போலீசார் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பெங்களூரு போலீசார் தி.மு.க. ஒன்றிய செயலாளர் காதர்பாஷா, அவரின் கார் டிரைவர் முத்துசாமி ஆகியோரை பெங்களூரு அழைத்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பெங்ளூரு போலீசார் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த பெட்டமுகிலாளம், உரிகம், அஞ்செட்டி ஆகிய வனப்பகுதிகளில் சுற்றி திரியும் யானைகளை துப்பாக்கியால் சுட்டு கொன்று தந்தங்களை கடத்தி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விற்று வந்தனர்.

    நேற்று 12 யானை தந்தங்களுடன் பெங்களூரு பிரமுகர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்திய போது யானை தந்தங்களை கடத்த உதவிய தி.மு.க. ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது டிரைவர் குறித்து தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணைக்காக பெங்களூரு அழைத்து வந்துள்ளோம். யானை தந்தம் கடத்தல் விவகாரம் தொடர்பாக இதுவரை 5 பேரை கைது செய்துள்ளோம். மேலும் சிலரை கைது செய்ய வேண்டியது உள்ளது. கைதான தி.மு.க. ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது கார் டிரைவர் ஆகியோருடன் யானை தந்தம் கடத்தல் கும்பல் பலமுறை செல்போனில் பேசியது உறுதியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களது போன் இணைப்புகளை ஆய்வு செய்ததில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட 2 பேருக்கும் இதில் தொடர்பு இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து தான் அவர்களை கைது செய்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×